யோபு

11 அதிகாரம்


    1. அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக:

    2. ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ?

    3. உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?

    4. என் சொல் சுத்தம் என்றும், நான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.

    5. ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத் திறந்து,

    6. உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.

    7. தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?

    8. அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன?

    9. அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது.

    10. அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்?

    11. மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ?

    12. புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.

    13. நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.

    14. உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.

    15. அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர்.

    16. அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.

    17. அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.

    18. நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்.

    19. பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள்.

    20. துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல் ஒழிந்துபோகும் என்றான்.


முந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்

தமிழில் தேடுதல் | Home