எரேமியா

7 அதிகாரம்


    1. கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

    2. நீ கர்த்தருடைய ஆலயத்தின் வாசலிலே நின்று, அங்கே கூறிச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், கர்த்தரைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே பிரவேசிக்கிற யூத ஜனங்களாகிய நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

    3. இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்.

    4. கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள்.

    5. நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து,

    6. பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில்,

    7. அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன்.

    8. இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள்.

    9. நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி,

    10. பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?

    11. என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர்குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    12. நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.

    13. நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,

    14. என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.

    15. நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    16. நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை.

    17. யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா?

    18. எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்புமூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.

    19. அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    20. ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

    21. இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால்: உங்கள் தகனபலிகளை மற்றப் பலிகளோடுங்கூட்டி, இறைச்சியைச் சாப்பிடுங்கள்.

    22. நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும்பார்க்கிலும்,

    23. என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

    24. அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்.

    25. உங்கள் பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்மட்டும் நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களண்டைக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன்.

    26. ஆனாலும் அவர்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள்.

    27. நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார்கள்.

    28. ஆகையால் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற, ஜாதி இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல்.

    29. நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார்.

    30. யூதா புத்திரர் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.

    31. தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.

    32. ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.

    33. இந்த ஜனத்தின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை வெருட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.

    34. நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன்; தேசம் பாழாகும்.


முந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்

தமிழில் தேடுதல் | Home