ஏசாயா

61 அதிகாரம்


    1. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

    2. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,

    3. சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.

    4. அவர்கள் நெடுங்காலம் பாழாய்க்கிடந்தவைகளைக் கட்டி பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்.

    5. மறுஜாதியார் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அந்நிய புத்திரர் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சத்தோட்டக்காரருமாயிருப்பார்கள்.

    6. நீங்களோ கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள்; நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக்கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள்.

    7. உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்.

    8. கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்; நான் அவர்கள் கிரியையை உண்மையாக்கி, அவர்களோடே நித்திய உடன்படிக்கை பண்ணுவேன்.

    9. அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்.

    10. கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.

    11. பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும் தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும் கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.


முந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்

தமிழில் தேடுதல் | Home