I நாளாகமம்

18 அதிகாரம்


    1. இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, காத் பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தரின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.

    2. அவன் மோவாபியரையும் முறியடித்ததினால், மோவாபியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

    3. சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.

    4. அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரைவீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களையும் வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.

    5. சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்யத் தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,

    6. தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

    7. ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.

    8. ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான்.

    9. தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,

    10. அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்துக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்.

    11. அந்தத் தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையும்கூடத் தாவீதுராஜா கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.

    12. செருயாவின் குமாரன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் ஏதோமியரை முறிய அடித்தான்.

    13. ஆகையால் தாவீது ஏதோமிலே தாணையம் போட்டான்; ஏதோமியர் எல்லாரும் அவனைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

    14. தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.

    15. செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.

    16. அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான்.

    17. யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் புத்திரர் ராஜாவினிடத்தில் பிரதானிகளாயிருந்தார்கள்.


முந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்

தமிழில் தேடுதல் | Home