நீதிமொழிகள்

31 அதிகாரம்


    1. ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:

    2. என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,

    3. ஸ்திரீகளுக்கு உன் பெலனையும், ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.

    4. திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.

    5. மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.

    6. மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;

    7. அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.

    8. ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.

    9. உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.

    10. குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.

    11. அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.

    12. அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.

    13. ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.

    14. அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.

    15. இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.

    16. ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.

    17. தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.

    18. தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.

    19. தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.

    20. சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.

    21. தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.

    22. இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லியபுடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.

    23. அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.

    24. மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.

    25. அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள்.

    26. தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.

    27. அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.

    28. அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:

    29. அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.

    30. சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

    31. அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.


முந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table

தமிழில் தேடுதல் | Home